நல்லாட்சி, நவம்பர் 2019
அனுபவி இராஜா அனுபவி.
அனுபவி இராஜா அனுபவி
என்ற பாடலை அனைவரும் கேட்டு மகிழ்ந்திருப்போம். இப்பாடலில் வரும் 'அனுபவி' என்ற சொல் தமிழ்ச்சொல்லா? அன்று. இச்சொல் வடசொல்லாகும். இந்த 'அனுபவி' என்ற சொல் மட்டுமன்று. ஏராளமான வட சொற்கள் நம் தமிழ் மொழியில் பின்னிப் பிணைந்து ஊடுருவியுள்ளன. சான்றாக 'அனு' என்று தொடங்கும் வட சொற்கள் மட்டுமே எத்துணை அளவு பரவிக் கிடக்கின்றன என்பதை இங்குக் காண்போம்.
அனுமதி இலவசம்.
உங்கள் அனுமதி வேண்டும்.
அனுதினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவை இல்லை.
அவன் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறான்.
இதுவே என் அனுமானம்.
கடவுளின் அனுக்கிரகம் கிட்டியது.
தலைவர் மறைவையொட்டி இன்று துயரம் அனுசரிக்கப் படுகிறது.
அவனோடு அனுசரித்துப் போ.
தேர்தலில் அனுதாப அலையால் வெற்றி கிட்டியது.
இச்செயலுக்கு அனுகூலமாய் இரு.
இத்தொடர்களில் இடம் பெற்றுள்ள அனுமதி, அனுதினம், அனுபவம், அனுமானம், அனுக்கிரகம், அனுசரித்தல், அனுகூலம், அனுதாபம் ஆகிய இவையனைத்தும் வடசொற்களே. நமது அன்றாட எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இவை எவ்வாறு வெகு பரவலாக ஊடுருவியுள்ளன என்பதைக் காணுங்கள். ஏன்? இவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இல்லையா? இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.
"அனுமதி இலவசம்" என்பதில் அனுமதி, இலவசம் ஆகிய இரண்டுமே வட சொற்கள். ஆதலின் அவற்றிற்கு மாற்றாக "நுழைவுக்கட்டணம் இல்லை" எனக் கூறலாம். அவ்வாறே மேற்கண்ட தொடர்களைத் தமிழ்ச்சொற்கள் கொண்டு பின்வருமாறு மொழியலாம்.
உங்கள் அனுமதி வேண்டும் - உங்கள் இசைவு
வேண்டும்
அனுதினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் - நாடோறும் (நாள்தோறும்) பள்ளிக்குச் செல்ல
வேண்டும்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவை
இல்லை - இந்த வேலைக்குப் பட்டறிவு
தேவை இல்லை.
அவன் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறான் - அவன் வாழ்க்கையை நன்றாக நுகர்கிறான் அல்லது அவன் வாழ்க்கையை நன்றாகத் துய்க்கிறான்.
இதுவே என் அனுமானம் - இதுவே என் கணிப்பு.
கடவுளின் அனுக்கிரகம் கிட்டியது - கடவுளின் அருள் கிட்டியது.
தலைவர் மறைவையொட்டி இன்று துயரம் அனுசரிக்கப் படுகிறது - தலைவர் மறைவையொட்டி இன்று துயரம் கடைபிடிக்கப் படுகிறது.
அவனோடு அனுசரித்துப் போ - அவனோடு இணக்கமாகப் போ.
தேர்தலில் அனுதாப அலையால் வெற்றி கிட்டியது - தேர்தலில் இரக்க அலையால் வெற்றி கிட்டியது.
இச்செயலுக்கு அனுகூலமாய் இரு - இச்செயலுக்கு உதவியாய் இரு.
மேற்கண்ட தொடர்களில் அனுமதி, அனுபவம், அனுசரித்து ஆகிய சொற்களுக்கு அவை இடம் பெறும் தொடர்களுக்கு ஏற்றாற்போன்று பொருள் மாறுபாடு கொள்வதை நோக்கலாம்.
அனுமதி - இசைவு, நுழைவு என்ற பொருள்களிலும்
அனுபவம் - பட்டறிவு, துய்த்தல், நுகர்தல் என்ற பொருள்களிலும்
அனுசரித்து - கடைபிடித்தல், இணக்கம் என்ற பொருள்களிலும் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்.
இவ்வாறு வட சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் நம் மொழியில் கொட்டிக் கிடக்க, அவற்றை விடுத்து நாம் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது, கனியிருப்பக் காய் கவர்தல் அன்றோ!.
ஆதலின், இன்று முதல் 'அனு' எனத் தொடங்கும் வடசொற்களை அடியோடு புறந்தள்ளுவோம்! அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த முயன்றிடுவோம்! தமிழை வளர்த்தெடுப்போம்!
&இன்னும் ஆளும் தமிழ்...